×

காட்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் அதிரடி கைது

திருவலம், ஜூன் 12: காட்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் அருகே உள்ள அம்முண்டி பாலாற்று பகுதியில் மணல் கடத்துவதாக திருவலம் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு ேராந்து சென்றனர். அப்போது, ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மீது மோதுவது போல் வேகமாக வந்ததார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் அருகே குதித்து உயிர் தப்பினார்.

பின்னர், போலீசார் அந்த லாரியை விரட்டி சென்றனர். அப்போது நிலைதடுமாறிய லாரி, பள்ளத்தில் சிக்கியது. உடனே லாரியில் இருந்து இறங்கி டிரைவர் தப்பி ஓட முயன்றார். போலீசார் சுற்றி வளைத்து அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், திருவலம் அடுத்த அம்முண்டி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பாலா என்ற பாலமுருகன்(35) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். பின்னர், அவரை காட்பாடி சப்-கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலை தடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : sub-inspector ,sand hazard ,Katpadi ,
× RELATED அரிவாளுடன் சுற்றியவர் கைது