கலெக்டரிடம் புகார் மனு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்

திருச்சி, ஜூன் 11: பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பிஎஸ்என்எல் அகில இந்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் நேற்று அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு கூட்டம் நடந்தது. மாநில துணைச் செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். மாநில ஆலோசகர் கணேசன், மோகன், மனோகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சசிகுமார் வரவேற்றார். இதில் அகில இந்திய தலைவர் சிவகுமார் பேசியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் குறைவிற்கு ஜியோ நிறுவனத்தின் அடாவடியான கட்டண குறைப்பு வர்த்தக போட்டிதான் முக்கிய காரணம். இந்திய தொலைத் தொடர்பு துறையாக இருந்து, பிஎஸ்என்எல் என்கின்ற பொது துறையாக மாற்றம் பெறும் போது, அரசு அளித்த உறுதி மொழிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிராமப்புறங்களில் சேவையை வழங்குவதால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை.

வளர்ச்சி விரிவாக்கப் பணிகளுக்கு போதுமான நிதி கிடைக்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள், இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்று தங்கள் நிறுவனத்தை வளப்படுத்திக் கொள்கின்றன, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வெறும் 10,000 கோடி ரூபாய் தான் கடன் உள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க வங்கியில் கடன் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தொடர்புத் துறையை நிர்வகிக்கும் ரவிசங்கர் பிரசாத் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று கூறியுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளித்து, நிலைத்து நிற்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக நிற்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை, 2 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்று அகில இந்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார்.  இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Central Government ,BSNL ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு...