×

ஆர்டர் இல்லாமல் பெல் சார்பு நிறுவனங்கள் பாதிப்்பு

திருவெறும்பூர், ஜூன் 11: பெல் நிறுவனத்தை சார்ந்திருக்கும் நிறுவனங்கள் ஆர்டர் இல்லாமல் கடன் நெருக்கடியாலும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நடந்த திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தின் 2வது மாவட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சிஐடியூ தொழிற்சங்கத்தின் 2வது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளார் வரவு செலவு அறிக்கையை படித்தார். மாநில துணைத்தலைவர் திருவேட்டை, துணைப் பொதுச்செயலாளர் திருச்செல்வம் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டனர். கூட்டத்தில் பெல் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு உள்ள சலுகைகளை முறைப்படுத்துவதோடு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள சமவேலைக்கு சம ஊதியத்தை வழங்க வேண்டும்.

பெல் சார்பு தொழிற்சாலைகள் கடன் நெருக்கடியை தடுப்பதோடு ஆர்டர்களை வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை வழங்கவேண்டும். முறைசாரா தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நலவாரியங்கள் அமைக்க வேண்டும். பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடராஜன், நிர்வாகி ராதாகிருஷ்ணன் மாநில குழு நிர்வாகி தங்கவேல் உட்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட துணைதலைவர் பழனிசாமி வரவேற்றார்.

Tags : Bell ,companies ,
× RELATED உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை...