மண்ணச்சநல்லூர் அரசு மாதிரிப் பள்ளியில் மேம்பாட்டு பணிகள்

மண்ணச்சநல்லூர், ஜூன் 11: மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் மாதிரிப்பள்ளியாக மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை நிதி மட்டுமின்றி தனியார் நிதி உதவிகள் பெறப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த கோடை விடுமுறையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நிதி உதவியோடு பள்ளி கட்டங்களுக்கு புதிய வர்ணங்கள் பூசப்பட்டது. மேலும் சிதிலமடைந்திருந்த பள்ளி வராண்டா மற்றும் வகுப்பறைகளுக்கு புதிதாக தளம் போடப்பட்டது.

பள்ளியில் 7 வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளி நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளின் வருகையை மொபைல் ஆப் மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்ணச்சநல்லூர் அரசு மாதிரிப்பள்ளியில் நடைபெற்று வரும் கல்வி மேம்பாட்டு பணிகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளான இன்று (நேற்று) அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாதிரி பள்ளியை தேர்ந்தெடுத்து உள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாதிரிப்பள்ளியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இந்த பள்ளியில் பள்ளி கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், வகுப்றைகளில் மராமத்து பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்றது. அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நிதி உதவி அளிக்க விரும்பும் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகலாம். கல்வி கட்டணங்கள் பொறுத்தவரை பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே பெற வேண்டும். கட்டண தொகையை பள்ளி வளாகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டி தெரியப்படுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள கல்வி கட்டணத்தை தவிர அதிகப்படியாக கட்டணம் வசூலிப்பது ஆதாரப்பூர்வத்துடன் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: