×

தட்டாஞ்சாவடியில் வேகத்தடையில் வேகமாக ஏறிய லாரியில் இருந்து சிதறிய ஜல்லிகள்

புதுச்சேரி, ஜூன் 11:  தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை அருகே வேகத்தடையில் லாரி வேகமாக ஏறி இறங்கியதால் வழிநெடுகிலும் ரோட்டில் ஜல்லிகள் சிதறியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன. நகர பகுதிக்குள் சிமெண்ட், ஜல்லி, மணல் ஏற்றி வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நேற்று அதிகாலை 5 மணியளவில் தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி ஜல்லி ஏற்றி வேகமாக வந்த டிப்பர் லாரி தட்டாஞ்சாவடி, பாப்ஸ்கோ குடோன் எதிரே உள்ள வேகத்தடையில் லாரி, ஏறி இறங்கியதில் பின்பக்க கதவில் இடைவெளி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்து தொடங்கி தொழிற்பேட்டை சந்திப்பு வேகத்தடை வரையிலும் சாலைகளில் வழிநெடுகிலும் ஜல்லி கொட்டி சிதறிக் கிடந்தது. நீண்டநேரத்திற்குபின் இதை கவனித்த டிரைவர், வண்டியை உடனே நிறுத்தி பின்பக்க கதவை சாிசெய்த பிறகு மீண்டும் வண்டியை எடுத்துச் சென்று விட்டார். சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லியை அகற்ற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே அந்த சாலையில் ைஹமாஸ் விளக்குகள் பழுதாகி இருள்சூழ்ந்து கிடக்கும் நிலையில், காலையில் அப்பகுதியில் வேகமாக வந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. பைக்கில் வந்த சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அரை கிமீ தூரத்துக்கு சாலையில் ஜல்லி கற்கள் சிதறிக் கிடப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வரவே சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த வடக்கு டிராபிக் போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பிறகு அங்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நவீன இயந்திரங்கள் மூலம் ஜல்லிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது. இதன்காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : jallies ,
× RELATED ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் பணப்பாக்கம்-புதுப்பேட்டை சாலை