×

போதிய பராமரிப்பின்றி தஞ்சை அரண்மனை வளாக சுவரில் ஓவியங்கள் அழியும் அவல நிலை

தஞ்சை, ஜூன் 11: தஞ்சை அரண்மனை வளாக சுவர்களில் வரைந்த ஓவியங்களை அழிந்து வருகிறது. இதை மீண்டும் வரைய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை அரண்மனை மராட்டியர் வம்சத்தில் உள்ளவர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் அரண்மனை சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தற்போது போதுமான பராமரிப்பு இல்லாததால் ஓவியங்கள் அழிந்து வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலையில் உள்ள அரண்மனை சுவரில் ஓவியங்கள் அவலநிலையில் இருப்பது வேதனையான விஷயமாக உள்ளது.

இதுகுறித்து சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், தஞ்சை அரண்மனை உலக அளவில் பெயர் பெற்றது. இங்கு சரஸ்வதி நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிப்பதற்கும், குறிப்பெடுப்பதற்கும் உலக நாடுகள் முதல் உள்ளூர்வாசிகள் வந்து செல்கின்றனர. அரண்மனையில் பழங்காலத்து ஓவியங்கள், தத்ரூபமாக வரைந்துள்ள சிற்பங்கள் பெயர் பெற்றவை. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரண்மனைக்கு செல்லும் முகப்பு மதில் சுவரில் அரசர்களின் வாழ்க்கை குறிப்பு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அரசவை, குதிரை, காலாட்படை, யானை படைகள், போர்வீரர்கள் என பழங்கால அரசர்களின் வாழ்க்கையை வரைந்திருந்தனர். தற்போது போதுமான பராமரிப்பு இல்லாததாலும், வெயிலின் உக்கிரத்தால் ஓவியங்கள் பெயர்ந்து பார்ப்பதற்கே பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் அரண்மனை நிர்வாகமும் போதுமான நிதி ஒதுக்கி மீண்டும் அரண்மனை மதில் சுவரில் பழங்காலத்து ஓவியங்களை வரைய வேண்டும் என்றார்.

Tags : palace ,Tanjore ,
× RELATED இவ்வளவு ஓவியங்களையும் வருஷக்கணக்கில்...