×

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நாளை முதல் வாரம்தோறும் துவங்கப்படவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் பகுதியில் விவசாயிகள் அதிகளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்தி பஞ்சுகள் வெடிக்க துவங்கியுள்ளது. பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூர் விற்பனை குழுவுக்குரிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை (12ம் தேதி) காலை 11 மணிக்கு பருத்தி மறைமுக ஏலம் துவங்குகிறது. இதில் வெளியூர் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பருத்தி வியாபாரிகள் பங்கேற்கின்றனர். எனவே பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களுடைய பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். பருத்தி பஞ்சுகளுக்கான விற்பனை தொகை வங்கி கணக்குகள் மூலம் வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை எடுத்துவர வேண்டும். இவ்வாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி, தஞ்சை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Cotton Auction ,
× RELATED நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்'