×

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருக்கும் குடிநீர் தொட்டி

திருக்கோவிலூர், ஜூன் 11: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 9, 12, 14, 15 ஆகிய வார்டுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு இடங்களில் தலா 1.99லட்சம் மதிப்பில் போர்வெல் கிணறு, சிறுமின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை சாலையில் 12, 14, 15 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக ஒரு குடிநீர் தொட்டியும், 9வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக திருக்கோவிலூர் சாலையில் ஒரு குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர் சாலையில் 9வது வார்டில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மட்டும் பணிகள் முடிந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதே காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள குடிநீர் தொட்டி மட்டும் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. இதனால் 12, 14, 15 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதோடு திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க படுமேயானால் அப்பகுதி மக்கள் பயனடைவதுடன், வழிப்போக்கர்களும் பயனடைவார்கள். மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் தொட்டியானது சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பேரூராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்காமல் உள்ளனர்.

ஆங்காங்கே நிதியும், நிர்வாக அனுமதியும் இல்லாமல் பல்வேறு அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகிறது. இங்கோ சுமார் 2லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராதது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது ஆங்காங்கே வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இந்த நிலையில் மணலூர்பேட்டை பகுதியிலும் தென்பெண்ணை ஆற்றில் குடிநீர் வழங்கி வரும் கிணற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் அங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திறக்கப்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை திறக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags : completion ,
× RELATED பாலக்காட்டில் எம்பி தொகுதி நிதி ரூ.2.26...