×

வேப்பூர் தாலுகாவில் 5 நாள் ஜமாபந்தி முகாம்

வேப்பூர், ஜூன் 11: வேப்பூர் தாலுகாவுக்குட்பட்ட வருவாய் கிராமங்களின் ஜமாபந்தி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை)முதல் 5 நாட்கள் நடைபெறும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் 2019ம் ஆண்டிற்கான ஜமாபந்தி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜமாபந்தி அலுவலரும் அம்பிகா சுகர்ஸ் துணை ஆட்சியருமான வைத்தியநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 9 மணிக்கு தொடங்கும் ஜமாபந்தியில் துணை ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் அன்றைய வருவாய் கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வரும் 18ம் தேதி தீர்வு காணப்படும். அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை வேப்பூர் குறுவட்டத்தை சேர்ந்த நல்லூர், வண்ணாத்தூர், நகர், மேமாத்தூர், இலங்கியனூர், சாத்தியம், ஏ.சித்தூர், வலசை, பிஞ்சனூர் ஊராட்சிகளுக்கும், புதன்கிழமை மாளிகைமேடு, மேலக்குறிச்சி, கீழக்குறிச்சி, என்.நாரையூர், சேப்பாக்கம், ஐவதுகுடி, கோ.கொத்தனூர், திருப்பயர், தே.புடையூர், வரம்பனூர் கிராமங்களுக்கும், வியாழக்கிழமை அன்று சிறுநெசலூர், பூலாம்பாடி, நிராமணி, காலியாமேடு, காட்டுமைலூர், பெரியநெசலூர், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம், பா.கொத்தனூர், ஆதியூர், ஏ.கொளப்பாக்கம், வேப்பூர், மன்னம்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் நடைபெறும். வரும் 14 மற்றும் 18ம்  தேதிகளில் சிறுபாக்கம் குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின்படி, விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் ஆலோசனையின் பேரில் வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல், மண்டல வட்டாட்சியர் சிவராமன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பூர்ணிமாவினிதா, வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர் வட்ட பழனி, சிறுபாக்கம் வெற்றிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறுமாறு வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : camp ,taluk ,Vepur ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு