மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கூடலூரில் பொதுமக்கள் மறியல் முயற்சி

திட்டக்குடி, ஜூன் 11: திட்டக்குடி அருகே கூடலூரில் சுடுகாட்டின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தில் விருத்தாசலம்-திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையோரத்தில் சலவை தொழிலாளர், ஆதிதிராவிடர், கிறிஸ்தவர், வள்ளுவர் உட்பட பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வகையில் இப்பகுதியில் 2 சென்ட் பரப்பளவில் ஒரு மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று கூடலூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி, இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனவும் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கிராமமக்களிடம் விரிவாக பேசி அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி உறுதியளித்தார். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

× RELATED கலசபாக்கம் அருகே சீரான குடிநீர்...