×

விருத்தாசலம் சிறையில் விசாரணை கைதி உறவினர்களிடம் பணம் வசூல்

விருத்தாசலம், ஜூன் 11: விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி, பெண்ணாடம், ஆவினங்குடி, வேப்பூர், ராமநத்தம் உள்ளிட்ட காவல்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்காக கொண்டு வரும் விசாரணை கைதிகளை இந்த சிறையில் அடைத்து பின்பு அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததும் வெளியே விடுகின்றனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகளை அவரது உறவினர்கள் வந்து பார்ப்பதற்கும், அவர்கள் ஜாமீன் கிடைத்து வெளியே செல்லும்போதும் உறவினர்களிடம் சிறை வார்டன்கள் பணம் கேட்டு டார்ச்சர் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 20 மாட்டுவண்டி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 15 நாட்களுக்கு பின் அவர்கள் வெளியே விடப்பட்டபோது, ஒவ்வொருவரிடமும் தலா 500 ரூபாய் பணம் கேட்டு வார்டன்கள் வசூலித்ததாக சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் கூறினர். மேலும் அந்த சமயங்களில் பணம் தரவில்லை என்றால் அவர்களை வெளியே விடுவதில் தாமதம் ஏற்படுத்துவதும், பின்பு அவர்களை தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் திட்டி பேசி வெளியே அனுப்புவதுமாக சிறை வார்டன்கள் உள்ளதாக கூறுகின்றனர். எனவே பல சூழ்நிலையின் காரணமாக விசாரணை கைதிகளாக உள்ளே சென்றுவிட்டு, மனம் நொந்து வெளியே வருபவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வார்டன்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Investigation ,
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்