×

3 ஆண்டாக மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறோம்

புதுக்கோட்டை, ஜூன் 11: மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறோம். எனவே சீராக குடிநீர் வழங்க இடையூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆவுடையார்கோவில் செங்காணம் ஊராட்சி இடையூர் கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக மழை பெய்யாததால் வறட்சி பிடியில் சிக்கி தவிக்கிறோம். ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. நாங்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீரின்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் ரூ.10 கொடுத்து ஒரு குடம் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நாங்கள் பணம் கொடுத்தால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஆண்டு காலமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலஉதவிகள் வழங்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்களின் அசர் நலவாரிய அட்டையும் திரும்ப கிடைக்காததால், பிற உதவிகள் பெற விண்ணப்பிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அற்ப காரணங்களை கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே கலெக்டர் உடனே கண்காணிப்புக் குழுவை கூட்டம் நடத்தி தொழிலாளர்களுக்கு நலஉதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!