காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டரிடம் மனு

நாகை, ஜூன்11: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் அரசு கட்சியினர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் பேரணியாக வந்து மனு கொடுத்தனர். பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கொடுத்தனர். இந்நிலையில் மக்கள் அரசு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ்செல்வி மற்றும் பலர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பின்னர் அவர்கள் குறைதீர் கூட்ட அரங்கம் சென்று மனு கொடுத்தனர். அதில், நாகை மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டமாகும்.

காவிரி டெல்டா பகுதிகளில் அமைந்துள்ள நாகூர், கீழ்வேளுர், நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய தொழில் விவசாயம் தான். இந்த சூழ்நிலையில் எந்த பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தடுக்க மாநில அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டம் செயல்படுத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் அழிந்து பாலைவனமாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த வகையிலும் அனுமதி அளிக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

4 வழிச்சாலை நிலம் எடுப்பிற்கு உரிய இழப்பீடு  கேட்டு மனு:

நாகை விழுப்புரம் சாலைக்கு நிலம் கொடுப்பவர்கள் சார்பில் கொடுத்த மனுவில், விழுப்புரம் தொடங்கி நாகை வரை 4 வழிச்சாலை அமைக்க நிலம் அபகரிப்பு செய்யப்படுகிறது. இதற்கான இழப்பீடு தொகை முறையாக கணக்கீடு செய்து வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை. மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டும் தான் வந்துள்ளோம். இன்னும் ஐவநல்லூர், தெத்தி, பாலையூர், முட்டம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வரவில்லை. நிலத்தை எடுத்து கொண்டவர்களின் வங்கி கணக்கில் குறைவான இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று கூடி தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே போராட்டத்தில் தள்ளாமல் உரிய இழப்பீடுதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>