×

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் வேளாங்கண்ணி அருகே நாளை மனித சங்கிலி

நாகை, ஜூன் 11: விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாளை (12ம் தேதி) மனித சங்கிலி போராட்டம் வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளியில் நடைபெறும் என்று புதுப்பள்ளியில் நடந்த ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து நேற்று வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு இயக்கம் சார்பாக அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட 5 கடலோர கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கலந்து கொண்டனர். அப்போது மூன்றுபோகம் விளைந்த காவிரி டெல்டா உணவு உற்பத்தியில் 80 சதவீதம் பூர்த்தி செய்து வந்தது.

ஆனால் தற்பொழுது ஒரு போக சம்பா சாகுபடியே கடந்த சில ஆண்டுகளாக கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் 274 இடங்களில் சுமார் 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் குடிநீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும். அதேபோல் விவசாய நிலங்களும் பாலைவனமாக மாறும். இயற்கை முற்றிலுமாக அழிந்து கால்நடைகள் மற்றும் மீன் வளம் அழிந்து டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து விடும் நிலை ஏற்படும்.எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து செருதூர் முதல் வேட்டைக்காரனிருப்பு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நாளை (12ம் தேதி)மாலையில் நடத்தப்படுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Velankanni ,
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...