×

திருச்சுழி பகுதியில் வேகமாகச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

திருச்சுழி, ஜூன் 11: திருச்சுழி பகுதியில், அதிக வேகமாகச் செல்லும் டிப்பர் லாரிகளால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கிராவல் மண் அள்ளிச் செல்கின்றன. இந்நிலையில், லாரிகள் லோடுகளோடு சென்றாலும், காலியாகச் சென்றாலும் வேகமாகச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி, திருச்சுழி-ராமேஸ்வரம் பகுதிகளில் சாலைகள் தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் செல்லும் டிப்பர் லாரிகள் திடீரென பிரேக் பிடித்தல், முன்னால் செல்லும் வாகனங்களை முந்துதல் உள்ளிட்ட சமயங்களில் திடீரென விபத்து ஏற்படுகிறது.

குறிப்பாக ஊர்ப்பகுதிகளில் டிப்பர் லாரிகள் அதிக வேகமாகச் செல்லும்போது, மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்து அச்சத்தில் செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருச்சுழி பகுதியில் அதிக வேகமாகச் செல்லும் டிப்பர் லாரிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலைகளில் சைக்கிளில் செல்லும்போது கூட, டிப்பர் லாரிகள் அதிகவேகமாகச் செல்கின்றன. இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் பலமுறை எச்சரித்தும், அவர்கள் வேகத்தை குறைப்பதில்லை. நகர்ப் பகுதிக்குள் அதிக வேகத்துடன் செல்வதால், விபத்து அச்சத்தில் நடமாடுகிறோம். இந்த லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : Tiruchirapalli ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் 17 வயது...