கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நிழற்குடையில் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் பயணிகள் அச்சம், பீதி

கரூர், ஜூன் 11: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நிழற்குடையில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து திருச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளான தாந்தோணிமலை, வெள்ளியணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் இந்த பகுதியில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். பஸ் நிறுத்தம் அருகே திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையும் உள்ளது. ஆனால் இந்த நிழற்குடை சரிவர பராமரிக்காத காரணத்தினால், பயணிகள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. இந்த பகுதியை சுற்றிலும் இருட்டாக காணப்படுவதால் இரவு நேரங்களில் பயணிகள் உள்ளே செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

மேலும் இருட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் தான் உள்ளே சென்று வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் பயணிகள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. பல்வேறு நபர்கள் தேவையின்றி உள்ளே சென்று வருவதால் அசுத்தமான நிலையில் நிழற்குடை உள்ளதால் பகல் நேரங்களிலும் மக்கள் இதனை பயன்படுத்துவதில்லை. எனவே நிழற்குடை அருகே தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தருவதோடு, மோசமான நிலையில் உள்ள இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் எனவும் அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் பாரபட்சமின்றி தெரு விளக்கு வசதியோடு, நிழற்குடையையும் பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

× RELATED வெற்றியை பார்த்து பயம் - தனுஷ்