×

மாவட்டம் கூட்டுறவு விதிகளை மீறி செயல்படும் அதிமுக நிர்வாகிகள்

தேனி, ஜூன் 11: தமிழகத்தில் 18 ஆயிரம் கூட்டுறவு நிறுவனங்களில் பொறுப்புக்கு வந்துள்ள அதிமுக நிர்வாகிகள், கூட்டுறவு சட்டங்கள், விதிமுறைகளை மீறி  செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாறினால் பெரும்பாலானோர் வழக்கில் சிக்கும் அபாய சூழ்நிலை நிலவுதாக கூட்டுறவுத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. இதில் இயக்குனர், துணைத்தலைவர், தலைவர் பதவிகளை நியமன அடிப்படையில் பெரும்பாலும் அதிமுகவினரே கைப்பற்றி உள்ளனர். வழக்கமாக திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக பொறுப்பேற்கும் திமுகவினருக்கு கூட்டுறவு சங்க விதிகள், நிர்வாக நடைமுறைகள் குறித்து 15 நாள் முதல் ஒரு மாதம் வரை பயிற்சிகள் வழங்கப்படும். சங்கத்தை எப்படி செயல்படுத்த வேண்டும், இயக்குனர், துணைத்தலைவர், தலைவருக்கு உரிய அதிகாரங்கள் என்னென்ன, எந்த வகையான கடன்களை வழங்க பயனாளிகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பயனாளிகளிடம் பெற வேண்டிய ஆவணங்கள் என்னென்ன, யாருக்கு எந்த வகையில் கடன் வழங்கலாம். கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படும் போதும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து கடன் வாங்கும் போதும், சங்கத்திற்கு தேவையான செலவுகளை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும்.

இதனால் திமுக நிர்வாகிகள் இருந்த ஆட்சிகாலத்தில் பெரும்பாலும் நிர்வாகிகள் பெரும் சிக்கலில் சிக்கவில்லை. கடந்த முறையும், தற்போதும் பொறுப்பேற்றுள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு எந்தவித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. விதிமுறைகள், நடைமுறைகள் குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சங்க செயலாளர்களை மிரட்டி தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் தேவையானவற்றை செய்து வருகின்றனர். கடந்த முறை இது போன்ற தவறுகளில் ஈடுபட்ட சில அதிமுக நிர்வாகிகள் மீது, அதிமுக ஆட்சி காலத்திலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது: தற்போதய நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போது கூட்டுறவு நிறுவனங்களில் பொறுப்புகளில் இருந்து ஆவணங்களில் கையெழுத்து போட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வழக்கில் சிக்க வேண்டிய அபாய சூழ்நிலை உள்ளது. பலர் கைதாகும் அளவுக்கு விதிகளை மீறி செயல்படுகின்றனர். சங்க செயலாளர்களின் அறிவுரைகள் எங்கும் பலனளிக்கவில்லை. சில சங்கங்களில் அதிமுகவினரின் விதிமீறல்களை பயனபடுத்தி சங்க அதிகாரிகளும் ஆட்சி மாறினால் சிக்கல் அவர்களுக்கு தானே என நினைத்து தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கின்றனர். உண்மையில் நிர்வாகிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்குமே சிக்கல் ஏற்படும் எனக் கூறினர்.

Tags : executives ,AIADMK ,
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு