×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் கோரிக்கை மனு

கரூர், ஜூன் 11: காவிரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக ஏராளமானோர் மனு கொடுத்து சென்றனர். வெள்ளியணை தென்பாகம், ஜல்லிப்பட்டி, மேக்காலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த பல வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் எந்த பயனும் இல்லை. எனவே புதிதாக ஆழ்துழாய் கிணறு அமைத்து தொட்டியில் சேமித்து தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவிரி தண்ணீரும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதே போல் கரூர் மாவட்டம் வளையல்காரன்புதூர் அண்ணா நகர்ப் பகுதி மக்கள் சிலர் தந்த மனுவில் கடந்த 2 மாதமாக தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி காலி குடங்களுடன் மனு கொடுத்து சென்றனர். கடவூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் பகுதி மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப் பணி எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. தற்போது 100 நாள் பணியில் நிதி இல்லை எனக் கூறி எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.சுழற்சி முறையில் பணிகள் வழங்காமல் தேவையானவர்களுக்கு மட்டும் பணிகள் வழங்கும் நடவடிக்கை இந்த பகுதியில் நிலவி வருகிறது. இது குறித்து கேள்வி கேட்டாலும் முறையான பதில்கள் வழங்குவதில்லை. மேலும் அட்டையை பறிமுதல் செய்து விடுவதாகவும் மிரட்டப்படுகிறோம். எனவே எந்தவித தலையீடும் இல்லாமல் அனைவருக்கும் வேலை கிடைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Karur Collector ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு...