×

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பரிதாப பலி

கரூர், ஜூன் 11: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். குளித்தலை பேராளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்(26). தனியார் ரோடு காண்ட்ராக்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் பைக்கில் சிந்தலவாடி பழைய மணல் ஸ்டாக்பாய்ன்ட் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

பைக்மோதி நடந்து சென்றவர் பலி:
கரூர் தாந்தோணிமலை பாரதி நகரை சேர்ந்த சிதம்பரம்(59). வெங்கக்கல்பட்டி திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூக்கணாங்குறிச்சியை சேர்ந்த திரிலோகசந்தர்(59) என்பவர் வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிதம்பரம் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். திரிலோகந்தர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாந்தோணிமலை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்து பெண் தற்கொலை:
கரூர மாவட்டம் பச்சப்பட்டியை சேர்ந்தவர் சியாமாளா(40). இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை செய்தவர் கைது:
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்பனை செய்வதற்காக பாபு(29) என்பவர் 350 கிராம் கஞ்சாவை கொண்டு சென்றார். கஞ்சாவையும், ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூதாடிய 5 பேர் கைது:
தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி குருணிகுளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப்(45), அலாவுதீன்(51), ஜாகீர் உசேன்(50), சீத்தப்பட்டி சுப்பிரமணி(50), வரவணை வீராச்சாமி(40) ஆகிய 5 பேரும் குருணிகுளத்துப்பட்டி காட்டுப்பகுதியில் சூதாடுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சிந்தாமணிபட்டி போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது 5 பேரும் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் திருட்டு வாகனங்கள் பறிமுதல்:
அரவக்குறிச்சி போலீசார் மலைக்கோவிலூர், சித்தப்பட்டி காலனி, டெக்ஸ் பார்க், ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனத்தில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருவேடம் பட்டி மந்தையில் ஒரு டாரஸ் லாரி, டிப்பர் லாரி ஆகியவற்றில் ஜேசிபி மூலம் அனுமதியின்றி திருட்டு மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த போலீசாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். டாரஸ் லாரி, டிப்பர் லாரி, ஜேசிபி ஆகியவற்றை ஏற்றிய மணலுடன் அரவக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : bathroom ,victim ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி