×

நூல் விலை ஏற்றத்தால் பட்டுசேலைக்கு ரூ.500 நஷ்டம் கூலி வேலைக்கு செல்லும் நெசவாளர்கள்

பரமக்குடி, ஜூள் 11:  ஒரு பட்டு சேலைக்கு ரூ.500 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதால், வாழ்வாதாரம் இழந்து வருவதாக கைத்தறி நெசவாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பட்டு நூல் விலை ஏற்றத்தால், கைத்தறி நெசவாளர்கள் பட்டு சேலை உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டு சேலைகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக பட்டு சேலைகள் உற்பத்தி செய்து பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த முன்று மாதங்களாக பட்டு நூல் விலை ஏற்றத்தால் பட்டு சேலை உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. கச்சாபட்டு விலை, கடந்த 5 மாதங்களுக்கு முன் 3,300 ரூபாயாக இருந்தது. தற்போது 4500 ரூபாயாக அதிகரித்து விட்டது. அதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், விலை குறையாமல் உள்ளது. அதற்கேற்ப விலை உயர்த்தி விற்பனை செய்ய முடிய வில்லை.

இதனால் நெசவாளர்கள் கண்ணீர் சிந்தும் அளவில் ஒரு சேலைக்கு ரூ.400 முதல் 500 வரை நஷ்டத்தை சந்திந்து வருகின்றனர். இதுதவிர 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் நெசவாளர்களுக்கு பாதிப்பாக இருப்பதால், நெசவு தொழிலை விட்டு விட்டதால், வாழ்வாதாரம் இல்லாமல் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு வருகின்றனர். சங்கங்களும் நெசவாளர்களுக்கு போதிய வேலை கொடுக்காத நிலையில், வேறுவழியின்றி குடும்பத்துடன் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து நெசவாளர் நாராயணன் கூறுகையில், ‘பரமக்குடி நகராட்சி உட்பட்ட பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் இருக்கிறோம். எங்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டு கச்சாநூல் வாங்கி நெசவு செய்து விற்பனை செய்கிறோம். கடந்த 4 மாதங்களில் பட்டு நூலின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், பட்டு உற்பத்தியில் ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, நியாயமான விலையில் தங்கு தடையின்றி கச்சாபட்டு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்’என்றார்.

Tags : Weavers ,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி