×

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள கடைகள்

ஆத்தூர், ஜூன் 11: ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள காமராஜனார் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாகவும், 250க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவம், காது தொண்டை, மூக்கு என தனிப்பிரி செயல்படுவதால் அதிகளவில் வெளியூர்களிலிருந்து  நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தை சுற்றி கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை முன்பு பஸ்களை நிறுத்தி ஆட்களை இறக்குவதால் அங்கும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கூறுகையில், ‘ஆத்தூர் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக செயல்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்தையொட்டி, பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பஸ் நிறுத்தத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பஸ்களை நிறுத்த ஒட்டுநர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும். மேலும், ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : Shops ,Attur Government Hospital ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி