×

மதுரை கலெக்டரை நியமிப்பதில் தொடர் மர்மம்

மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டத்துக்கு புது கலெக்டர் நியமிக்காமல் ஒரு வாரமாக இழுத்தடிக்கப்படுவதால் நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கிறது. குறிப்பாக குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் குறைதீர்க்க கலெக்டர் இல்லை. இதனால் நாளை தொடங்கும் ஜமாபந்தி என்னாகும்? 560 சத்துணவு பணியாளர் நியமனத்திற்காக காலதாமதப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மக்களவை தேர்தலின்போது வாக்கு பதிவு இயந்திர மையத்திற்குள் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டராக இருந்த நடராஜன் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக நாகராஜன் ஏப்ரல் 28ல் பொறுப்பேற்றார். இவர் தேர்தல் முடிந்தும் கலெக்டராக நீடித்தார். இந்த சூழலில் அங்கன்வாடி பணியாளர் 1,573 பேருக்கு ஏற்கனவே நேர்முக தேர்வு நடத்தி முடித்து நியமனம் செய்யப்படாமல் கோப்புகள் தூங்கி கொண்டு இருந்தன. ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தலையீட்டினால் இந்த பணி நியமனங்கள் முடியாமல் கிடப்பில் கிடப்பதாக புகார் கூறப்பட்டது. இந்த கோப்புகளை கலெக்டர் நாகராஜன் துணிச்சலுடன் கையில் எடுத்து ஒரே நாளில் 1,573 அங்கன்வாடி பணியாளர் நியமன உத்தரவு பிறப்பித்து, அவர்களின் வீடு தேடி வழங்க செய்தார். உடனடியாக நாகராஜன் மாற்றப்பட்டு, கடந்த 4ம் தேதி கலெக்டர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். நாகராஜன் 38 நாட்கள் மட்டுமே இங்கு கலெக்டராக இருந்தாலும் அவரது நடவடிக்கையை அனைவரும் பாராட்டினர்.

பொதுவாக மாவட்ட கலெக்டர் மாற்றம் செய்யப்படும்போது, புது கலெக்டர் நியமிப்பது வழக்கம். ஆனால் ஒரு வாரமாகியும் புது கலெக்டர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது டி.ஆர்.ஓ. சாந்தகுமாரிடம் கலெக்டர் பொறுப்பு உள்ளது.
ஒரு வாரமாக கலெக்டர் இல்லாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் முடிவு எடுக்க வேண்டிய கோப்புகள் மலைபோல் குவிந்து  நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே போல் உடனடி தீர்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகளை கேட்டு தீர்க்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. நேற்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் குறைகேட்க கலெக்டர் இல்லை. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வந்திருந்த மக்கள் பல மணிநேரம் காத்திருந்து மனுக்களை மட்டும் அளித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஜமாபந்தி மதுரை மாவட்டத்தில் ஜூன் 12ம் தேதி (நாளை) தொடங்கி 25ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை பேரையூரில் நடக்கும் ஜபாபந்தியில் கலெக்டரும், வாடிப்பட்டி ஜமாபந்தியில் டிஆர்ஓவும் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜமாபந்தி என்னாகும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் நியமனம் ஆளும்கட்சி அமைச்சர், எம்எல்ஏக்கள் தலையீடு இல்லாமல் முடிக்கப்பட்டுள்ள நிலையில், 560 சத்துணவு பணியாளர் நியமனத்துக்கு நேர்முக தேர்வு முடித்து நியமனம் செய்யப்படாமல் கோப்புகள் முடக்கி போடப்பட்டுள்ளன. இந்த நியமனமும், அங்கன்வாடி பணியாளர் நியமனம் போல் ஆகி விடாமல் முன் கூட்டியே அதற்கு அனுசரணையான கலெக்டர் யார்? என்று தேடுவதில் தாமதம் ஏற்படுகிறதோ? என்ற சந்தேகம் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Collector ,Madurai ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...