×

இருப்பாலி சந்தையில் பாம்பு கடித்து உயிரிழந்த ஆட்டுக்கறி விற்பனை

இடைப்பாடி, ஜூன் 11:  இருப்பாலி சந்தையில் பாம்பு கடித்து உயிரிழந்த ஆடுகளை வெட்டி, கறி விற்பனை செய்த 4 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இடைப்பாடி அருகே உள்ள இருப்பாலியில் திங்கட்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதேபோல், சந்தையில் உள்ள கறிகடையில் ஆட்டுக்கறி உள்ளிட்டவையும் விற்பனை செய்கின்றனர்.

இந்த கடைகளில் கடந்த சில நாட்களாக பாம்பு கடித்து உயிரிழந்த ஆடுகளையும், நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்த ஆடுகளையும் வெட்டி, கறியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், இந்த ஆட்டுகறியை வாங்கி சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் சந்தை கூடியது. அப்போது, அங்கிருந்த கறிக்கடையில் பாம்பு கடித்து உயிரிழந்த ஆடுகள் வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கறிகடையை முற்றுகையிட்டு, கறிகடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயா பொதுமக்களிடம் சமாதானம் பேசி, சம்பந்தபட்ட கடைகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார், அவரிடம், பன்னீர்செல்வம் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், இடைப்பாடி பகுதியை சேர்ந்த கார்த்தி(28), பாலமுருகன்(37), ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு(54), தண்ணீர்தாசனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன்(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுவது, கெட்டுபோன உணவுகளை விற்பனை செய்த பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பாம்பு கடித்து உயிரிழக்கும் ஆடுகள், நோய் தாக்குதலால் உயிரிழக்கும் ஆடுகளை கொண்டு வந்து அறுத்து, நல்ல கறியுடன் கலந்து, கூறு போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.  இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிராமப்பகுதிகளில் ஆய்வு செய்து, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கொங்கணாபுரத்தில் 350 மூட்டை பருத்தி ₹6.50 லட்சத்திற்கு ஏலம்