மேல்நரியப்பனூர் ஆலய திருவிழா சேலம்-சின்னசேலம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், ஜூன் 11: மேல்நரியப்பனூர் அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சேலம்-சின்னசேலம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்நரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத்திருவிழா இன்று தொடங்கி நடக்கிறது. இதையொட்டி, சேலம்-விருத்தாச்சலம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக சேலம்-சின்னசேலம் இடையே இன்று (11ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, சேலம்-சின்னசேலம் முன்பதிவில்லா சிறப்பு பாசஞ்சர் ரயில், சேலத்தில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, சேலம் மார்க்கெட், சேலம் டவுன், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி வழியே வாழப்பாடிக்கு மதியம் 12.04க்கு செல்கிறது.

 பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் வழியே மேல்நரியப்பனூருக்கு மதியம் 1.13க்கு சென்றடைகிறது. பிறகு சின்னசேலத்திற்கு 1.30 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் சின்னசேலம்-சேலம் முன்பதிவில்லா சிறப்பு பாசஞ்சர் ரயில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, மேல்நரியப்பனூருக்கு 1.58க்கும், ஆத்தூருக்கு 2.22 மணிக்கும், வாழப்பாடிக்கு 2.55 மணிக்கும் வந்து சேலத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Southern Railway ,
× RELATED பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு...