×

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் ஊழியர்கள்

ஒட்டன்சத்திரம், ஜூன் 11: திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை  வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் ஊழியர்களால் நோயாளிகள் வேதனைக்குள்ளாகி  வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளான  ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி,  மூலச்சத்திரம், லெக்கையன்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து தினமும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர். இங்கு  வரும் பொதுமக்களை அரசு மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்கள் மிகவும்  தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்கின்றனர். மேலும் அவசர  சிகிச்சை மற்றும் முதுலுதவிக்காக வரும் நோயாளிகளை ‘இங்கு எதற்கு  வருகிறீர்கள், வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது தானே’ என்று மிரட்டி  அனுப்பிவிடுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் அருகே  திப்பம்பட்டியைச் சேர்ந்த முருகாயி (55) என்பவருக்கு விபத்து ஏற்பட்டு,  விபத்தில் காலில் உள்ள இரண்டு எலும்புகள் முறிந்த நிலையில் 108  ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக  ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு  சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸ்  ஊழியர்களிடம் இங்கு எதற்கு கொண்டு வருகீறீர்கள், பழனி, திண்டுக்கல்  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது தானே என்று வாய்க்கு வந்தபடி  வசைபாடுகின்றனர்.

மேலும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அதிகாலையில்  உணவு அருந்தாமல்  இரத்த பரிசோதனைக்கு வரும் நோயாளிகளை பலமணி நேரம்  காத்திருக்க வைப்பதாகவும், சீட்டு பதியும் இடத்தில் சில நேரங்களில் ஆட்கள்  இருப்பதில்லை. சீட்டு பதிய வரும் நோயாளிகளிடம் மிக கடுமையாக  நடந்துகொள்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு  மருத்துவமனையில் குடிநீர் வசதிகளும் இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு  கொடுக்கப்படும் மாத்திரைகள் போதியளவில் இல்லை என்றும் குறைகூறுகின்றனர். எனவே மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு  வரும் நோயாளிகளிடம் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government hospital ,hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு