×

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ரோட்டை ஆக்கிரமிக்கும் விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு தாண்டிக்குடியை சேர்ந்தவர் நுாதன போராட்டம்

திண்டுக்கல், ஜூன் 11: கொடைக்கானல் தாண்டிக்குடியில் உள்ள சாலைகள், தெருக்களில் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாததால், நானும் ஆக்கிரமித்து புதுப்பிக்கும் விழா நடத்த உள்ளேன். இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஒருவர் திருமண பத்திரிக்கை போல நோட்டீஸ் அச்சடித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் விநியோகித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்தவர் கணேஷ்பாபு(50). இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருமண அழைப்பு போல பத்திரிக்கை ஒன்றை பொதுமக்களிடம் விநியோகித்தார். இதில் கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பலர் ஆக்கிரமித்துள்ளதால், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பிணங்கள் மறறும் சுவாமி துக்கி செல்ல முடியவில்லை. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும், போராட்டங்கள் நடத்தினோம். இதன்பின்பு அரசு அதிகாரிகள் கடந்தாண்டு தாண்டிக்குடி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றாவிட்டால், அரசே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும் என்று 20.8.2018 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

அரசு உத்தரவை மதித்து நோட்டீஸ் கிடைத்த மறுவாரமே நான்தான் முதலில் ஆக்கிரமிப்பை அகற்றினேன். அதன் பின்பு சிலர் மட்டுமே அகற்றினர். நான்கு முறை நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகியும் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதால், அகற்றிய சிலரும் மீண்டும் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கொடைக்கானல் ஒன்றிய அரசு அலுவலர்கள் தான். இவர்கள் ஆக்கிரமிப்பாளருக்கு ஓராண்டாக உறுதுணையாக உள்ளனர். திட்டமிட்டு காலதாமதம் செய்கின்றனர். இதனால் நானும் மன உளைச்சல் அடைந்துள்ளேன். இதனால் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து புதுப்பிக்கும் விழா நடத்த முடிவு செய்துள்ளேன். இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் ஆக்கிரமிப்பு புதுப்பிக்கும் விழாவிற்கு வருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அந்த அழைப்பிதழில் கூறியுள்ளார்.

Tags : invasion ceremony ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...