×

நிலக்கோட்டையில் தொடர் திருட்டு காவல் நிலையம் அருகிலேயே கைவரிசை காட்டிய திருடர்கள்

செம்பட்டி, ஜூன் 11: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலக்கோட்டை காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஆகியவைகள் உள்ள காம்பவுண்டை ஒட்டிய மொபைல் கடையில், திருடர்கள் ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து, சுமார் 1.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்கள், பெண்டிரைவ்கள், மெமரி கார்டுகள் மற்றும் 6000 ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதே போல, கடந்த 5ம் தேதி நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரம் உள்ள, டாக்டர் சிரஞ்சீவி மகன் வெங்கடேஷ் என்பவர் மதுரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அன்று இரவு அவரது வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் கதவினை உடைத்து வீட்டில் 7 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

மேலும், வெங்கடேசின் மனைவி அன்று அதிர்ஷ்டவசமாக கோடை காலத்திற்கென தண்ணீர் ஊற்றி வைக்க வாங்கிய மண்பானையில் மறைத்து வைக்கப்பட்ட  பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் தப்பின. இதே போன்று நிலக்கோட்டையில் முக்கியச் சாலைகளில் வாகனத்திருட்டு, செயின் பறிப்பு போன்ற திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பாதுகாப்பு இன்றி பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் காவல்துறையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததாலும், அதிகமான வேலைப் பளு காரணமாகவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நிலக்கோட்டை பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : thieves ,Nilakkottai ,police station ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...