×

கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?.

கொடைக்கானல், ஜூன் 11: கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல்  நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சிக்கு  உட்பட்ட அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த  சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது. கீழ் குண்டாறு கூட்டுக்  குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட  சாலைகள் அனைத்தும் மூடப்படாமல் விடப்பட்டதால் சாலைகள் முற்றிலுமாக  சேதமடைந்துவிட்டன. குழாய் பதிக்கும் பணி தொடங்கி சுமார் ஒரு வருடம் ஆகிய  நிலையில் இந்த சாலைகள் அனைத்தும் அப்படியே விடப்பட்டு தினந்தோறும்  பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணித்து  வருகின்றனர். இந்த சாலைகள் அனைத்தையும் நகராட்சி குறைந்தபட்சம் பேட்ச்  வொர்க் செய்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்ததாவது, கொடைக்கானல் அண்ணா சாலை, நாயுடுபுரம் சாலை, பேருந்து  நிலையம் அருகே உள்ள சாலை, ஆனந்தகிரி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்து  சாலைகளும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு  பெய்த கனமழையின் காரணமாக மேலும் சேதமடைந்துள்ளது. இந்த சாலைகள் அனைத்தையும்  விரைவில் சீர்செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தவும் பொது மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றனர்.

Tags : roads ,municipality ,Kodaikanal ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை