×

திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் குடிநீர் கிடைக்காமல் கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள்

திண்டுக்கல், ஜூன் 11: திண்டுக்கல்  மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் கேட்டு  காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க  குவிந்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும்  நாள் கூட்டம் நடந்தது. இதில் கலகெ–்டர் வினய், டி.ஆர்.ஓ., வேலு உட்பட பலர்  பங்கேற்றனர். இதில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் குடிநீர் கேட்டு  குவிந்தனர். இதுகுறித்து முருகதுாரன்பட்டி பொதுமக்கள் கூறும்போது: நிலக்கோட்டை தாலுகா  முருகதுாரன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் நாங்கள் வசிக்கிறோம். 200  குடும்பங்கள் உள்ளோம். கடந்த ஓராண்டாக குடிநீர் கிடைக்கவில்லை. எங்கள்  ஊரில் இரண்டு போர்வெல்கள் இருந்தும் செயல்படாமல் உள்ளது. நாங்கள்  குடிநீரையும், பிற தேவைகளுக்கான நீரையும் குடம் ரூ.10 கொடுத்து விலைக்கு  வாங்குகிறோம். இல்லாவிட்டால் 3 கி.மீ., துாரம் சென்று வாகனங்களில் தண்ணீர்  பிடித்து வருகிறோம். அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று எங்களால் தண்ணீர் பிடிக்க  முடிவதில்லை. நாங்கள் மீறி சென்றால் அவர்கள் தகராறு செய்கின்றனர்.  செய்தவறியாது தவித்த வருகிறோம். அதிகாரிகளிடம் முறையிட்டும் தண்ணீரை  தருவதில்லை. தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்  காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளோம், என்றார்.

வடமதுரை  புத்துார் பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 100 வீடுகள் உள்ளன. எங்கள்  பகுதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் சரியாக வரவில்லை. 15 நாட்களுக்கு  ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. அதுவும் அரை மணிநேரம் தான் வருகிறது. இதை  பிடிக்க முடியாமல் நாங்கள் அவதிப்படுகிறோம். ஊரை சுற்றி 6 போர்வெல்கள்  இருந்தும் செயல்படாமல் உள்ளது. தண்ணீருக்கு நாங்கள் தனியார் லாரிகளை  பார்த்து தவம் கிடக்க வேண்டியுள்ளது. கட்டட தொழிலாளர்கள், கூலி வேலைக்கு  செல்பவர்கள் தண்ணீர் வரும் நேரம் தெரியாமல், தண்ணீர் கிடைக்காமல்  அவதிப்படுகின்றனர். பல நாட்கள் குளிக்க முடியாமலும், துணிகள் துவைக்க  முடியாமல் அவதிப்படுகிறோம். இந்த அவலத்தை தீர்ப்பதற்கு உள்ளாட்சி  பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் கண்டு  கொள்வதில்லை. இதனால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறோம், குடிநீர் மற்றும் உப்பு  தண்ணீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Dindigul district ,collector ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...