×

வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த 3 கிராம மக்கள்

நாமக்கல்,  ஜூன் 11: வீட்டுமனை பட்டா கேட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலக குறைதீர்  கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் மனுவுடன் குவிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் பெரியமணலி கிராம மக்கள் வழங்கிய மனுவில்,  பெரியமணலி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசிக்கிறோம். பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மை நிலையில்,  வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை  பட்டாக்களை வழங்கி, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் கட்ட உத்தரவிட  வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோல் ராசிபுரம்  அடுத்த மூலக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள், மூலக்குறிச்சி  கிராமத்தில் நாங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. ஆனால்  எங்களின் வீட்டிற்கு பட்டா இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட  நிர்வாகத்திடம் பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இதையடுத்து கடந்த 2013ம்  ஆண்டு எங்கள் பகுதியில் உள்ள நிலங்களை அளந்து அத்து கண்டனர். விரைவில்  பட்டா வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால், 4 ஆண்டுகள் முடிந்தும்  இதுவரை  பட்டா வழங்கவில்லை. கலெக்டர் தலையிட்டு பட்டா கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையம் பொதுமக்கள், கலெக்டர் ஆசியாமரியத்திடம் வழங்கிய மனுவில்,  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு  சிவியாம்பாளையம் கிராமத்தில் 40 பேர் வீடு  கட்டிக்கொள்ள தலா இரண்டரை சென்ட் காலி நிலம் ஒதுக்கி, பட்டா வழங்கப்பட்டது.  ஆனால் தற்போது பலரிடம் பட்டா இல்லை. புதிதாக பட்டா கேட்டு மனு செய்த  போதிலும், அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுத்து  பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : housework ,
× RELATED அழுதுகொண்டே வீட்டு வேலை செய்யும் நடிகை