×

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆமை வேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணி

ராசிபுரம், ஜூன் 11: ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே, பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ராசிபுரம் நகராட்சியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும்  புதியதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டதால், சாலை மட்டுமின்றி சாக்கடையும் வீணாகிப்போனது. மந்த கதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணியால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராசிபுரம் -சேலம் சாலையில், பழைய பஸ் நிலையம் அருகே 5க்கும் மேற்பட்ட முறை சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சாலையில் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து கான்கிரீட்  தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளாமல் பகுதி பகுதியாக மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர, பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
தினமும் இந்த சாலையில் பெருமாள் கோயில், சிவன் கோயில்கள்,  டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள், அஞ்சலக தலைமை அலுவலகம், தனியார் பள்ளி, காவலர் குடியிருப்பு உள்ளிட்டவைகள் உள்ளது. இதனால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : turtle pace ,Bus Station ,Rasipuram Old ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...