×

அரசு மகளிர் கல்லூரி நுழைவு வாயிலில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்; மாணவிகள் அவதி

நாமக்கல், ஜூன் 11: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி நுழைவு வாயிலில் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடப்பதால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல்- திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. 13 பாடப்பரிவுகளை கொண்ட இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். சில மாணவிகள் அங்குள்ள விடுதியிலேயே தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். தற்போது, இக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கல்லூரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இது தவிர பொறியியல் சேர்க்கைகான சான்றிதழ் சரிபார்க்கும் மையமாகவும் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதற்காகவும் நாள்தோறும் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கல்லூரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இக்கல்லூரியையொட்டி, கால்நடை மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய், குதிரை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அப்போது, ஊசியும் போடப்படுகிறது. அவ்வாறு கால்நடைகளுக்கு ஊசி போடப்பட்ட பின்பு எஞ்சிய ஊசி மற்றும் பஞ்சு, ரத்தக்கறை படிந்த கட்டு கட்டும் துணி உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கழிவுகள் சாக்கடை நீரில் அடித்து வரப்பட்டு கல்லூரியின் மெயின் நுழைவு வாயில் முன் குவிந்து கிடக்கிறது.

இதனால், கல்லூரிக்கு வரும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரத்தக்கறை படிந்த பஞ்சு மற்றும் காயத்திற்கு போடப்பட்டு எஞ்சிய துணிகள் கல்லூரி நுழைவு வாயில் முன் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கால்நடை மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் இதனை கவனித்து கல்லூரி நுழைவு வாயில் முன் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டுமென மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்னர்.

Tags : Girls ,Government Women's College ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்