×

நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நாள்தோறும் வைக்கப்படும் அஞ்சலி பேனர்கள்

நாமக்கல், ஜூன் 11: நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நாள்தோறும் வைக்கப்படும் அஞ்சலி பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல் மணிக்கூண்டு பகுதியானது பிரதான போக்குவரத்து கேந்திரமாக விளங்கி வருகிறது. தினசரி இப்பகுதியை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இரவு-பகல் என எப்போதும் போக்குவரத்து காணப்படும். அதேவேளையில் மணிக்கூண்டு பகுதியில் விதி மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விளம்பரம் மற்றும் அரசியல் கட்சியினரால் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளுக்கு அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டால் பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் அணிவகுத்துள்ளன. நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் யார் இறந்தாலும் இங்கு அஞ்சலி பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்தாத வண்ணம் மாவட்ட காவல் துறையினரால் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்பி வேலியிலில் இறந்தவர்களின் கண்ணீர் அஞ்சலிக்காக அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் பிளக்ஸ் பேனர்களை மாட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், காலையில் இப்பகுதிக்கு வருபவர்கள் இந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர்களை நாள்தோறும் பார்த்து விட்டு செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக நல்ல காரியத்திற்காக செல்பவர்கள் இந்த பிளக்ஸ் பேனரை பார்க்காமல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5க்கும் மேற்பட்ட கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர்கள் நாமக்கல் மணிக்கூண்டு முன் கம்பி வேலியில் அமைக்கப்படுகிறது.

இதனை பார்த்துக் கொண்டே செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மணிக்கூண்டு பகுதியில் எந்தவிதமான பிளக்ஸ் பேனர்களையும் வைக்க கூடாது என்று மாவட்ட காவல்துறை வலியுறுத்தி உள்ளது. அந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு விதி மீறி பிளக்ஸ் பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, மாவட்ட காவல் துறையினர் இறந்தவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை இனி அவரவர் பகுதியிலேயே உரிய அனுமதி பெற்று வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Anjali ,area ,Namakkal ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...