×

தீவிபத்தால் பள்ளி வளாகத்தில் புகை மண்டலம் மூச்சுத் திணறலால் மாணவர்கள் தவிப்பு

சென்னை, ஜூன் 11: வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் - முடிச்சூர் செல்லும் பிரதான சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் ஓரத்தில் காலியாக உள்ள மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. கோடை வெயிலால் இந்த செடி, கொடிகள் காய்ந்து இருந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளும் இந்த மைதானத்தில் கொட்டப்படுகிறது. அதனை துப்புரவு ஊழியர்கள் சரவர அகற்றாததால், குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில், பள்ளி அருகே உள்ள மைதானத்தில் காய்ந்த புற்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால், காற்றில் தீ மளமளவென பரவியது. அங்கிருந்த அனைத்து செடி கொடிகளும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. மேலும், அருகில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் புகை சூழ்ந்ததால், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக, மாணவ மாணவியர் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ெபாதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த மாணவ, மாணவிகளை வெளியேற்றிய பள்ளி நிர்வாகம், அவர்களை பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, நீண்ட நேரம் போராடி, மைதனாத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனாலும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேட்டில் செயல்படும் தனியார் மருந்து கம்பெனி அருகே உள்ள காட்டில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்து மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காட்டுக்குள் பரவிய தீயை, சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Fireplace School premises ,
× RELATED தீவிபத்தால் பள்ளி வளாகத்தில் புகை...