கோடை மழை பொய்த்ததால் இயற்கை உரத்திற்கு தட்டுப்பாடு

திருவள்ளூர், ஜூன் 11: பருவ மழை பொய்த்து வயல்கள் காய்ந்து கிடப்பதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை. இதனால், வயல்களுக்கு இயற்கை உரம் கிடைக்காமல் போனதாக விவசாயிகள் புலம்புகின்றனர். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம், புதுமாவிலங்கை, பூண்டி, மோவூர் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் புன்செய் நிலங்களில், கோடை காலங்களில் மேய்ச்சலுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை விவசாயிகள் அதிகளவில் ஓட்டி வருவது வழக்கம். பகலில் மேய்ச்சல் முடிந்து இரவு வயல்களில் இயற்கை உரத்திற்காக ‘’கிடை’’ கட்டுவது வழக்கம். விவசாயிகள் குறிப்பிட்ட தொகைக்கு ஒப்பந்தம் செய்து இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வயலில் அடைத்து வைப்பர். இதனால் புன்செய் நிலங்களில் சிறந்த இயற்கை உரம் கிடைத்தது.

நடப்பாண்டு சம்பா அறுவடை துவக்கத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து, கடந்த ஆண்டை விட, கால்நடைகள் அதிகளவில் மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தனர். பருவ மழை மற்றும் கோடை மழை பொய்த்ததால், வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. ஏரி, குளங்கள் வறண்டு போய் உள்ளதாலும், கால்நடைகளுக்கு குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் கால்நடைகளை விவசாயிகள் வேறு மாவட்டங்களுக்கு ஓட்டி சென்றனர். இதனால் இந்த ஆண்டு இயற்கை உரம் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED ‘சர்ச் லைட்’ பற்றாக்குறை: வனத்துறையினர் தவிப்பு