×

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் திறந்தவெளி பாராக மாறிவரும் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம்

ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 11: ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெரும்புதூர், கட்சிப்பட்டு, கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, மணிமங்கலம், காட்டராம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். உடற்பயிற்சி வகுப்பில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்பட பல்வேறு விளையாட்டு சம்பந்தமாக, மாணவர்களுக்கு இந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை சேர்ந்த முதியோர், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் தினமும் நடைபயிற்சி செய்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் அதிகளவு கூட்டம் காணப்படும்.தற்போது அப்பகுதியை சேர்ந்த சிலர், இரவு 8 மணிக்கு மேல் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி வந்து, இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், கூட்டம் கூட்டமாக அமர்ந்து குடிக்கின்றனர். போதை தலைக்கு ஏறியதும் அங்கேயே, மதுபாட்டில்களை வீசி உடைகின்றனர்.

இதனால் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களின் கால்களில் கண்ணாடிகள் பதம்பார்க்கின்றன.நள்ளிரவு  முதல் அதிகாலை வரை குடிமகன்கள், விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து குத்தாட்டம் போடுகின்றனர். வேலை முடிந்து செல்லும் பெண்கள், இரவு பணி முடித்து செல்லும் ஆண்கள் இந்த மைதானம் வழியாக அதனை சுற்றியுள்ள நகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இரவில் செல்லும் பெண்களை, குடிமகன்கள் ஆபாசமான வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்கின்றனர். இதனால், அப்பகுதியில் நடந்து செல்லவே கடும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில், பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி அலுவலகம், காவலர் குடியிருப்பு, நீதிமன்றம் ஆகிய அரசு கட்டிடங்களின் அருகில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில், குடிமகன்கள் கும்மாளம் போடுவதை தடுத்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : court ,Government Higher Secondary School ,Sriperumbudur ,grounds ,
× RELATED சிலம்பாட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்