×

3 ஆயிரம் லஞ்சம் பெண் இன்ஸ்பெக்டர் கைது

சென்னை, ஜூன் 11: சென்னையை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தனது பைக்கில் ஆதம்பாக்கம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன சோதனை நடத்திய ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமாதேவி, கண்ணன் சென்ற பைக்கிற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்தார். காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை காட்டி வண்டியை எடுத்துச்செல் என பூமாதேவி கண்ணனிடம் கூறினார். அதன்படி, கண்ணன் காவல் நிலையத்திற்கு வந்து பைக்கிற்கு உண்டான ஆவணங்களை காட்டினார். அதற்கு பூமாதேவி, ₹3 ஆயிரம் கொடுத்துவிட்டு உனது பைக்கை எடுத்து செல், என கூறினார். முறையாக ஆவணங்களை காட்டிய பிறகு எதற்கு பணம் கேட்கிறீர்கள், தன்னிடம் தற்போது பணம் இல்லை என கண்ணன் கூறினார். பணத்தை கொடுத்தால் தான் பைக் திருப்பி வழங்கப்படும், என பூமாதேவி கூறியுள்ளார்.  

இதனால் வேதனை அடைந்த கண்ணன் மறுநாள் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இதுபற்றி புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மலர்கொடி உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை கண்ணனிடம் ரசாயனம் தடவிய ₹3 ஆயிரத்தை கொடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையம் அனுப்பினர். அவர்களும் அங்கு வந்து ரகசியமாக கண்காணித்தனர்.   அங்கு, பணத்தை கண்ணன், இன்ஸ்பெக்டர் பூமாதேவிடம் கொடுத்தார். அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பூமிதேவி கடந்த 2004ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்தவர். தற்போது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது பிடிபட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bribe girl inspector ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...