×

பஞ்சப்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

தர்மபுரி, ஜூன் 11: பஞ்சப்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரில், 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பெரும்பாலானவர்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எங்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள 3 ஆழ்துளை கிணறுகளில் ஒன்று மட்டும் தான் செயல்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது.

அதேபோல், தெருவிளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, பட்டாபி நகரில் தெருவிளக்கு அமைப்பது, சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மானியதள்ளி ஊராட்சி, அஜ்ஜிப்பட்டி கிராம மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனு: அஜ்ஜிப்பட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் 60 அடி அகலத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருந்த பாதையை, எங்கள் சொந்த செலவில் சாலையாக மாற்றி அமைத்தோம். மாணவிகள் விடுதி அருகே சாலை அமைக்கும் போது, அதே பகுதியை சேர்ந்த சிலர், தங்களது பட்டா நிலம் என கூறி சாலை அமைப்பதை தடுத்து விட்டனர். ஊர் பிரமுகர்கள் விசாரணையில், தவறான தகவல் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது. எனவே, தவறுதலாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நார்த்தம்பட்டி பொதுமக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனு:
நார்த்தம்பட்டி  ஊராட்சியில் உள்ள 8 குக்கிராமங்களில், 10 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம்.  சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர். ஆனால் நார்த்தம்பட்டியில் பணியாற்றும் ெபாறுப்பு விஏஓ  பணிக்கு வருவதே இல்லை. கடந்த 2 வருடமாக, விஏஓ அலுவலகம் பூட்டியே  கிடக்கிறது. இந்த அலுவலகத்தை திறப்பதற்காக, எங்கள் ஊராட்சிக்கு விஏஓவை  நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

அரூர் அருகே மூலசிட்லிங் கிராம மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனு:
அரூர் மூல சிட்லிங் பகுதியில், எங்களுக்கு சொந்தமாக பூமிதான இயக்க நிலம் உள்ளது. எங்களது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட இந்த நிலத்தை, கிரயம் செய்து தருமாறு சிலர் கேட்டனர். நாங்கள் தர மறுத்ததால், எங்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். இது தொடர்பாக எஸ்பி மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தோம். இந்நிலையில், கடந்த 7ம் தேதி அரசு பதிவெண் இல்லாத பொக்லைன் மூலம், எங்களது நிலத்தில் இருந்த பழமையான 3 புளியமரங்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் வேரோடு அகற்றினர். இதை தட்டிக்கேட்ட போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டினர். எனவே, எங்களுக்கும், உடமைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Facilities ,Panipalli ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...