×

தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மானாவாரி பயிர் சாகுபடி அதிகமுள்ள இந்த மாவட்டத்தில், மழைக்காலங்களில் ஏரிகளில் தேங்கும் நீரைக் கொண்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட கடும் வறட்சியால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு விட்டன. குறிப்பாக, சோகத்தூர் ஏரி, அன்னசாகரம் ஏரி, கிருஷ்ணாபுரம் ஏரி, புலிகரை ஏரி, பாலவாடி ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகள், முட்புதர் மண்டி கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக, மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இருந்த போதிலும், மழை நீர் ஏரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சென்று சேரவில்லை. பெரும்பாலான ஏரிகளில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், மழைநீர் தேங்குவதில்லை. ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏரிகளில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக ஏரிகளில் மழைநீர் தேங்குவதில்லை. இதனால் மாவட்டத்தில் தற்போது கோடைமழை பெய்தும், ஏரிகளில் குறிப்பிடத்தக்க அளவில் தண்ணீர் இல்லை. ஏரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். எனவே, ஏரிகளில் உள்ள முட்செடிகளை அகற்றி, ஏரிகளுக்கு மழைநீர் செல்வதற்கான நீர்வழிப்பாதைகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : lakes ,Dharmapuri district ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!