×

ஆவடி நகராட்சி பள்ளியில் கழிவுநீர், குப்பைகளால் துர்நாற்றம் தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள்

ஆவடி :  ஆவடி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஆவடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும், 19 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு பருவமழையின்போதும், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கும். மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டுவார்கள்.  இதனையடுத்து, பெற்றோர், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் எளிதாக சென்று வர நடைபாதை அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதன்பிறகு, நகராட்சி நிர்வாகம் நடைப்பாதை அமைக்க டெண்டர் விட்டது. மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர்  பணி தொடங்கப்பட்டு பாதியில் கிடப்பில் கிடக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமீபகாலமாக இப்பள்ளியில் இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் வழியாக ஏறி உள்ளே வருகின்றனர். பின்னர், அவர்கள் மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்கள் மதுஅருந்தி விட்டு காலி பாட்டில்களை பள்ளி மைதானத்தில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் வகுப்பறைக்கு மைதானம் வழியாக செல்லும்போது உடைந்துகிடக்கும் பாட்டில்கள்  மாணவர்களின் கால்களை பதம் பார்க்கின்றன.  இதோடு மட்டுமல்லாமல், பள்ளியை சுற்றி ஒரு புறத்தில் வீடுகளின் வெளிசுவர் சுற்றுச்சுவராக உள்ளது. இதனையடுத்து, வீடுகளின் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளி வளாகத்திற்குள் தான் வருகின்றன. மேலும், வீடுகளில் இருந்து குப்பைகளும் வளாகத்திற்குள் தான் வீசப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேட்டுடன் கடும் துர்நாற்றத்தில் மாணவர்கள் படிக்கின்றனர்.

மேலும், இங்குள்ள பல வகுப்பறைகளில் சன்னல், கதவுகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் சமூக விரோதிகள் வகுப்பறைகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல், பருவ மழையின் போது மழைநீர்  வகுப்பறைக்குள் வருகின்றன. இதுகுறித்து, பெற்றோர்கள், ஆசியர்கள் பலமுறை ஆவடி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர் என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நகராட்சி பள்ளியில் நள்ளிரவில் சமூக விரோதிகள் நுழையாமல் தடுக்க சுற்று சுவரை உயர்த்திட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் தொடர்ந்து பல ஆண்டாக கழிவுநீரை விடும் வீட்டு உரிமையாளர் மீது அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து, அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரில் மணல் கொட்டடுகிறார்களே தவிர நிரந்தர தீர்வு காண்பதில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : school ,Avadi ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி