×

37 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பு துவக்கம்

தூத்துக்குடி, ஜூன் 11:   தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ இம்மாவட்டத்தில் 37 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் இதுவரை 765  குழந்தைகள் சேர்ந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் மட்டுமே மீதம் இருக்கிறது. மற்ற அமிலங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு விட்டன. மீன்பிடி தடைகாலம் வரும் 15ம் தேதி முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டத்தின் படி பதிவுசெய்யப்பட்ட 24 மீட்டர் நீளம் மற்றும் 240 குதிரைத்திறன் (ஹெச்பி) திறன் கொண்ட விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் நவீனமயாக்கப்படுவதால் அங்குள்ள கடைகளை காலி செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்துள்ளது. பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் தற்காலிகமாக மாற்று இடத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் இருந்தும் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்
.
முன்னதாக, கோவில்பட்டி அருகேயுள்ள வெங்கடாசலபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் தயாரித்த கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலைப்பருப்பு, குதிரைவாலி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் விற்பனையை  துவக்கி வைத்தார். கயத்தாறு பூல்தாய், விளாத்திகுளம் மங்களேஸ்வரி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி உதவியாளருக்கான பணி நியமன ஆணை, திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தை சேர்ந்த வின்சென்ட்டுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கினார். கோவில்பட்டியைச் சேர்ந்த பிரபாகரராஜ் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததால், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  இழப்பீடாக ரூ.1,08,045க்கான காசோலையை  வழங்கினார்.

Tags : Elggei ,Anganwadi Centers ,UKGG ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...