×

இரவில் சிறுவியாபாரிகள் கடைகள் திறக்க அனுமதி

தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும்; இரவில் சிறு வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் வணிகர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனு:
 தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி உயர்வு பிரச்னை மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்வதில் கடுமையான போக்கை கையாள்கின்றனர்.

எனவே, சொத்து வரி உயர்வை குறைத்திடவும், வரிவசூல் முறையை கடுமையின்றி நடத்திடவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சிறு வியாபாரிகள் கடைகளை திறக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. அதிகபட்சம் இரவு 12 மணி வரைதான் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்திருப்பார்கள். எனவே சிறு வணிகர்கள் பயனடையும் வகையில் இரவு நேரத்தில் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர். அப்போது சங்கச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி