எட்டயபுரத்தில் தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்றது ஏன்?

எட்டயபுரம்,  ஜூன் 11:   எட்டயபுரம் நடுவிற்பட்டி தெற்கு ஆறுமுகமுதலியார் தெருவைச்  சேர்ந்த மாடசாமி மகன் கருப்பசாமி (35). கோவில்பட்டியில் உள்ள கறிக்கடையில்  வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முனீஸ்வரி (32). எட்டயபுரத்தில் உள்ள  தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இவர்களுக்கு முகேஷ்  (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள  தனியார் பள்ளியில் முறையே 6, 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த  கருப்பசாமி மனைவியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். இதில் அவர் சம்பவ  இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்துசென்ற எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய  கருப்பசாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டிக்கு நேற்று காலை வந்த கருப்பசாமியை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:  எனது மனைவியின்  சொந்த ஊர் கழுகுமலை அருகே உள்ள குமாரபுரம். எங்களுக்கு திருமணமாகி 12  ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் ஆரம்பத்தில் எட்டயபுரம் கோழிக்கறிக்கடையில்  வேலை பார்த்து வந்தேன். அதன்பிறகு கேரளாவில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு  சென்று விட்டேன். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினேன். பின்னர்  கோவில்பட்டியில் உள்ள கறிக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். தினமும் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணியளவில் வீடு திரும்புவேன்.

நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக வேலை முடிந்து மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தேன்.  அப்போது குழந்தைகள் இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். நான்  வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் என்னை தள்ளிக்  கொண்டு வெளியில் ஓடினார். இதுகுறித்து நான் எனது மனைவியிடம் கேட்டேன்.  அப்ேபாது அவர், பணம் கொடுப்பதற்காக அந்த வாலிபர் வந்ததாக கூறினார். மேலும்  முன்னுக்குப்பின் முரணாக பேசினார். நான் உண்மையை சொல் என்று கூறி அவரை  தாக்கினேன். பதிலுக்கு அவர், என்னை தாக்கினார்.

ஆத்திரமடைந்த நான்,  வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு என்னையே தாக்குகிறாயா? என்று  கூறி அவரை அடித்து கீழே தள்ளினேன். இதில் அங்கிருந்த இரும்பு சேரில் அவரின்  தலையின் பின்பகுதியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதன்பிறகு அங்கிருந்த  அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றேன். பின்னர் நான்  கோவில்பட்டியில் வேலை பார்த்த கோழிக்கறிக்கடைக்கு சென்றேன். அங்கிருந்த  உரிமையாளரிடம் அவசரமாக ரூ.5 ஆயிரம் வேண்டும் என்றேன். அதற்கு அவர், கணக்கு  முடித்தாகி விட்டது. காலையில் வந்து வாங்கிக் கொள் என்று கூறினார். அதன்படி  நான் காலையில் வந்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் என்னை மடக்கி  பிடித்து விட்டனர். எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த வாலிபர் யார்?  என்று தெரியவில்லை. வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் தான் எனது மனைவியை  கொன்றேன்.

இவ்வாறு அவர், வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான கருப்பசாமியை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில்  அடைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் முனீஸ்வரி உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் தகனம் செய்தனர்.

Related Stories:

More