×

கோவில்பட்டி, நாசரேத்தில் தென்றல் காற்றுடன் சாரல் மழை

கோவில்பட்டி, ஜூன் 11: கோவில்பட்டி, நாசரேத்  பகுதிகளில் குளு குளு தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். கோவில்பட்டி மற்றும் நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, வில்லிசேரி,  இடைசெவல், மூப்பன்பட்டி, காமநாயக்கன்பட்டி, இளையரசனேந்தல்,  பாண்டவர்மங்கலம், இனாம்மணியாச்சி, கடலையூர் உள்ளிட்ட சுற்று வட்டார அனைத்து  கிராமங்களிலும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகலில் வீசிய அனல் காற்றால் வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் தயங்கினர். இரவிலும் நிலவிய புழுக்கத்தால் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவித்துவந்தனர். இதனால் எப்போது மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்தனர்.  அத்துடன் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் முடிந்தபிறகும் நிலவிய கடும் வெயிலால் கிராமங்களில் உள்ள வேப்ப மரம், புளியமரம், புங்கை  மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களில் இலைகள் உதிர்ந்து எலும்பு கூடுகளாகக் காட்சியளித்தன.
இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  துவங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்திலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நிலவிய கடும் வெயில் தற்போது  தணிந்துள்ளது. இதேபோல் கோவில்பட்டி பகுதியிலும் வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனிடையே நேற்று முன்தினம்  காலை குளுகுளு தென்றல் காற்றுடன் மனதுக்கு இதமான சாரல்  மழை பெய்யத் துவங்கியது. பின்னர் மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த  மழை பெய்தது.

நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலுக்குப் பதிலாக குளிர்ந்த காற்றுடன் ஆங்காங்கே சாரல் மழை பெய்ததால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் கிராமங்களில்  நிலத்தடி நீராதாரம் அதிகரிப்பதோடு, தண்ணீரின்றி வாடிப்போன மரங்களில்  இலைகளும் தளிர்க்கும் நிலை ஏற்படும் என பொதுமக்கள தெரிவித்தனர். நாசரேத்: இதே போல் நாசரேத் பிரகாசபுரம், மூக்குப்பீறி, வகுத்தான்குப்பம், வாழையடி மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று காலை திடீரென மிதமான மழை பெய்தது. இதனால் பெருக்கெடுத்த தண்ணீர் தாழ்வான ஒரு சில இடங்களில் தேங்கி நின்றது. கடந்த சில வாரங்களாக கொளுத்திய வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ந்த காற்றுடன் திடீரென பெய்த மழையால் நாசரேத் மற்றும் சுற்று வட்டார மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kovilpatti ,Nazareth ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா