×

மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

ஏர்வாடி, ஜூன் 11:  நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக சாரலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்தது. மேலும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே அனலாய் தகித்த வெயிலால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். அக்னி நட்சத்திரத்தின் உச்சகட்டமான கத்திரி வெயிலின்போது 107 டிகிரி வரை  வெயில் கொளுத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், இரவு நேரங்களில் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். அக்னி  நட்சத்திரம் முடிந்தும், கடந்த வாரமாக வெயில் சுட்டெரித்தது. கோடை வெயில் காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மானூர், சங்கரன்கோவில், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடம் தண்ணீரை ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால் நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரலுடன் மழை பெய்ய துவங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் உள்பகுதியிலும் சாரலுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காவல்கிணறு, பணகுடி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, வி.கே.புரம், கடையம், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்பட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
பணகுடி பகுதியில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியிருப்பதால் விவசாய பணிகளை துவங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். நேற்றிரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வந்தது

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் தென்காசி - நாகர்கோவில் பிரதான சாலையில் பெரியகுளம் உள்ளது. நாங்குநேரி தாலுகாவில் உள்ள பெரியகுளங்களின் ஒன்றாக திகழும் இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருக்குறுங்குடி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக கடந்த மார்ச் மாதம் பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டது. பாலைவனம்போல் காட்சி அளித்தது. ஜூன் மாதம் தொடங்கிய பிறகும் மழை பெய்யாததால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதியில் கார் சாகுபடி பணிகளை தொடங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே கடந்த இரு நாட்களாக திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு நேற்று முதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. 3 மாதமாக வறண்டு கிடந்த குளத்திற்கு நீர் வர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளை தொடங்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதேபோல் திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நம்பியாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்