×

திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஆர்டிஓவிடம் மனு கொடுத்தனர்

திருவண்ணாமலை, ஜூன் 11: திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்டிஓவிடம் மனு கொடுத்தனர். திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பயிர்கள் கருகி விவசாய கடனை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பலத்த காற்றினால் வாழை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கறவை மாடுகளுக்கு மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும், வறட்சியால் மகசூல் இழந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

அதைத்தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கை மனுவை, திருவண்ணாமலை ஆர்டிஓ தேவியிடம் வழங்கினர். இதில் மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மற்றும் மனு ெகாடுக்கும் போராட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 9 கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக சென்று மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

வறட்சியால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்காசோளத்தில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பிரதமர் அறிவித்த வருடத்திற்கு ₹6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை களைந்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை முழுமையாக விவசாய பணிகளுக்கு மாற்ற வேண்டும். கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

Tags : petitioners ,announcement ,RTO ,district ,Tiruvannamalai ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு