ஆரணி அடுத்த வடுகசாத்து ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஊராட்சி செயலாளர் சமரசம்

ஆரணி, ஜூன் 11: ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் 3 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரணி அடுத்த வடுகசாத்து ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சேமித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடும் வறட்சியின் காரணமாக கடந்த 3 மாதங்களாக ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி செயலாளரிடமும், பிடிஓவிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஆரணி- தச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் சிவக்குமார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் நாளை(இன்று) டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்வதாக உறுதியளித்தார். இதனைஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

× RELATED முதல்வர் மம்தாவுக்கு டாக்டர்கள்...