×

வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கு மூட வேண்டும் விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு

வேலூர், ஜூன் 10: வழிப்பறி அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகின்றன. இந்நிலையில், மதுபானக்கடைகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு மதியம் 2 மணிக்குதான் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும். இந்நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் புறப்படும் விற்பனையாளர், மேற்பார்வையாளர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, வழிப்பறி அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேல் விற்பனை நடப்பதில்லை. இதனால், சம்பந்தப்பட்ட கடைகளில் உள்ள விற்பனையாளர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் இயங்குவதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக போலீசாரும் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த கடைகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, அதிகபட்சமாக ₹50 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை நடைபெறும் ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மதுக்கடைகளை இரவு 8 மணிக்கே மூட வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணிக்கே மூடப்படும்.

சம்பந்தப்பட்ட கடைகளில் இரவு 8 மணிக்கு மேல் விற்பனை நடக்காது என்பதால், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது. சம்பந்தப்பட்ட கடைகளில் மதுபாட்டில்களை குறைந்தளவில் இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது’ என்றனர்.

Tags : areas ,stores ,Taskmill ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்