×

லண்டனில் இருந்து சென்னை வழியாக கடத்தி வரப்பட்ட ₹40 கோடி மதிப்பிலான 10 டன் வெள்ளி கட்டிகள் பறிமுதல் தெலங்கானா அருகே பரபரப்பு

திருமலை, ஜூன் 11: லண்டனில் இருந்து சென்னை வழியாக கடத்தி வரப்பட்ட ₹40 கோடி மதிப்புள்ள 10 டன் வெள்ளி கட்டிகளை தெலங்கானா அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம், செகந்திரபாத் மாவட்டத்திலுள்ள போகினபல்லி காவல் நிலைய போலீசார் அங்குள்ள பால் பண்ணை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இரண்டு கண்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இரவு முழுவதும் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வங்கி ஏடிஎம்மிற்கு பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய தனியார் செக்யூரிட்டி வாகனம் இரண்டு வந்தது. தொடர்ந்து, அந்த கண்டெய்னரில் இருந்து சிறுசிறு பெட்டிகளை இந்த வாகனத்திற்கு சிலர் மாற்றினர்.

இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த நபர்களை பிடித்து, வாகனத்தில் சோதனை நடத்தினர். அப்போது பெட்டியில் வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த வெள்ளிக்கட்டிகள் லண்டனில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்ததும், சென்னையிலிருந்து ஐதராபாத்தில் உள்ள பல நகைக்கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளதும், இரண்டு கண்டெய்னர்களிலும் 10 டன் 500 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் இருப்பதும், அதன் மதிப்பு ₹40 கோடி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை கைது செய்து வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து இந்த வெள்ளி கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது ஜிஎஸ்டி வரியில் இருந்து அரசை ஏமாற்றி எடுத்து வரப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Telangana ,London ,Chennai ,
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி