வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவ ஆலோசனை கூட்டம்: பக்தர்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும் இணை செயல் அலுவலர் உத்தரவு

திருமலை, ஜூன் 11: திருப்பதி அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவத்தின்போது பக்தர்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம் உத்தரவிட்டார். திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேச சுவாமி கோயிலில் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 13ம் தேதி காலை 10 மணிக்கு பிரமோற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. 16ம் தேதி மாலை கல்யாண உற்சவம், 17ம் தேதி கருட சேவை, 20ம் தேதி ரத உற்சவம், 21ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரமோற்சவ விழாவை தினந்தோறும் காண வரும் பக்தர்களுக்காக குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாடவீதியில் இடையூறாக உள்ளவற்றை அகற்ற வேண்டும். புஷ்கரணி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு தேவையான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு வருடாந்திர தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

முதல் நாள் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ண சுவாமியும், இரண்டாவது நாள் சந்திரசேகர சுவாமி, கடைசி மூன்று நாள் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கடைசி மூன்று நாட்கள் உள்ள நீராழி மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. 16ம் தேதி தெப்பல் உற்சவத்திற்குப் பிறகு கஜ வாகனத்திலும், 17ம் தேதி கருட வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதையொட்டி அங்கு பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் துணை செயல் அலுவலர் வரலட்சுமி, ஜான்சிராணி, விஜிலன்ஸ் அதிகாரிகள் அசோக்குமார், சத்யநாராயணா, சந்திரசேகர், கூடுதல் சுகாதார அலுவலர் சுனில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

× RELATED ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் கழிப்பறையின்றி பக்தர்கள் அவதி